சமநீதியும், சம உரிமையும் கிடைக்க
உலக மகளிர் நாளில் உறுதி கொள்வோம்!
வைகோ உலக மகளிர் நாள் வாழ்த்து
பெண்ணின் பெருந்தக்க யாவுள! என்றும், பெண்மை வாழ்கவென்று போற்றுவோம்! என்றும் தமிழ்க் கவிஞர்கள் உன்னதமாகப் பாராட்டிய தாய்க்குலத்தின் உரிமை முழங்கும் நாள்தான் உலக மகளிர் தினமாகிய மார்ச் 8 ஆம் நாள் ஆகும்.
உலக மகளிர் நாளின் 115 ஆவது ஆண்டு விழா இந்த ஆண்டு ஐ.நா.மன்றத்தால் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் கொண்டாடப்பட உள்ளது. உரிமைகள் நீதி, செயல் என அனைத்தும் மகளிருக்குக் கிடைக்க வேண்டும். கல்வி, சமத்துவம், வேலைவாய்ப்பு, அதிகாரங்களை அளித்தல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பெண்களை உயர்த்திவிடுவதன் மூலம் நமது சமூகமே உயர்வடையும் என்று ஐ.நா. மன்றம் இந்த ஆண்டில் அறிவித்துள்ளது.
1909 ஆம் ஆண்டில் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி மகளிர் நாளை கொண்டாட வேண்டும் என்று குரல் எழுப்பியது. அதன் அடுத்த ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன் ஹேகன் நகரில் நடைபெற்ற உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாடும் இதனையே வலியுறுத்தியது. கிளாரா ஜெட்கின் என்ற அம்மையார் மகளிர் நாளை உலக முழுவதும் கொண்டாட வேண்டும் என்கிற தீர்மானத்தை கொண்டுவந்தார். இதன்பின்னர் அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் மகளிர் நாள் கொண்டாடப்பட்டாலும், 1975 ஆம் ஆண்டு, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் நாளை கொண்டாடுமாறு அழைப்பு விடுத்து அறிவித்தது.
தமிழ்நாட்டில் சங்ககாலம் தொட்டு தாய்மார்கள் அறத்தின் வடிவமாகவும், மான உணர்ச்சியை பிள்ளைகளிடம் ஊட்டும் வீர மகளிராகவும் கருதப்பட்டனர். திராவிடர் இயக்கம் மகளிர் விடுதலைக்காக குரல் கொடுத்துப் போராடி வருகிறது.
மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரும், டாக்டர் தருமாம்பாள் அவர்களும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களும், பெண்களின் உரிமைக்காகப் போராடிய வீராங்கணைகள் ஆவார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாளும் மதுவை எதிர்த்தும், வைக்கத்தில் நிலவிய சாதிக் கொடுமைகளை எதிர்த்தும், போராடி சிறை சென்ற வீரப் பெண்மணிகள் ஆவார்கள்.
பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் முறையினை நீதிக்கட்சி அரசுதான் முதன் முதலில் வழங்கியது. அன்று தொட்டு, அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமையிலான தி.மு.கழக அரசு தமிழ்நாட்டில் மகளிர் விடுதலைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆண்களுக்கு நிகராக சொத்துரிமை, அரசு பணிகளில் வேலைவாய்ப்பு உரிமை, கல்வி கற்க உதவி, உள்ளாட்சி நிர்வாகங்களில் பங்கு என பல்வேறு முற்போக்குத் திட்டங்களை திராவிட இயக்க அரசுகள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
ஆனாலும்கூட, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மதுவின் காரணமாக நிகழும் கொலைகள், பாலியல் கொடுமைகள் ஆகியவைகள் நாளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.
இலங்கைத் தீவில் சிங்களவர்கள் ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு இழைத்த பாலியல் வன்கொடுமைகளும், ஈழத் தமிழ் மக்கள் மீது ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாத நடவடிக்கைகளும் ஆறாத வடுக்களாக நம்மை வேதனைக்கு உள்ளாக்குகிறது. இனப் படுகொலைக்குக் காரணமான சிங்கள ஆட்சியாளர்கள் இன்றுவரை தண்டிக்கப்பட வில்லை.
நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிப்பது இன்னும் எட்டா கனியாகவே உள்ளது. அது சட்டமாக்கப்பட வேண்டும்.
இத்தகைய உணர்வுகளோடு உலக மகளிர் நாளில் பெண் இனத்தின் மாண்பு காக்க நம் சகோதரிகளுக்கு சமநீதியும், சம உரிமையும் கிடைக்க உறுதி கொள்வோம். மகளிர் அனைவருக்கும் உலக மகளிர் நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
07.03.2026
