இர்ஃபான் ஹபீப் மீது தாக்குதல்!
வைகோ கடும் கண்டனம்
புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் அவர்கள் புது தில்லி பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி ஒரு கருத்தரங்கில் பங்கேற்றபோது இந்துத்துவ மதவெறியர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புதுதில்லி பல்கலைக்கழகத்தில் வலதுசாரி அமைப்பினர் இலக்கிய விழா என்ற பெயரில் வெறுப்பை விதைக்கும் கருத்தரங்கத்தை நடத்தி உள்ளனர் .
இதற்கு மாற்றாக, அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் சார்பில் மக்கள் இலக்கிய விழா (People’s Literature Festival ) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சமத்துவ திருவிழா (Samta Utsav) என்ற பெயரில் இந்த நிகழ்வை மாணவர் அமைப்பு நடத்தியது.
பல்கலைக்கழகங்களில் நிலவும் பாகுபாடு மற்றும் நிறுவன ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி - UGC)சார்பில் வலுவான விதிகளைக் கொண்டுவர வேண்டும் என்றும், “ரோஹித் சட்டம்” இயற்றப்பட வேண்டும் என்றும் இந்த விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“இந்திய சமுதாயத்திலும் பல்கலைக்கழகங்களிலும் சாதி” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில், பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் அவர்கள் “வரலாற்றைச் சிதைப்பது” மற்றும் “பாஜக- ஆர் எஸ் எஸ் இணைந்து வரலாற்றை மறுஎழுத முயற்சிப்பது” குறித்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கருத்தரங்கம் நடைபெற்ற அரங்கில் நுழைந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்களும், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களும் இர்ஃபான் ஹபீப் மீது கற்களை வீசி, தண்ணீர் நிறைந்த வாளியை மேடையின் மீது எறிந்துள்ளனர்.
வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் மீதான தாக்குதல் என்பது கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல். அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல்.
உலகம் அறிந்த கல்வியாளரும், வரலாற்று ஆய்வாளருமான 94 வயது நிரம்பிய பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் தாக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கோழைத்தனமான இந்தத் தாக்குதலை அலட்சியப்படுத்திவிட்டு, இர்ஃபான் ஹபீப் அவர்கள் தான் எடுத்துக்கொண்ட தலைப்பில் ,மாணவர்கள் இடையே உரையாற்றி முடித்திருக்கிறார்.
இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிரான சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு எதிராக பேராசிரியர் இர்ஃபான் ஹபீப், வரலாற்று ஆசிரியர் ரொமில்லா தாப்பர் போன்றோரின் வலிமையான குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்துத்துவா மதவெறியர்களால் அவர்கள் சிந்தனைக்கு விலங்கு பூட்டவோ, செயல்பாடுகளை தடுக்கவோ முடியாது.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.02.2026
