ஈழத் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரிக்கையை மூடி மறைக்கவும், சுதந்திரத் தமிழீழக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவும் சிங்கள அரசின் மறைமுக நடவடிக்கைதான் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கோவை இராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகள் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு பொன்னையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், தமிழ்ப் புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ்
ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை
வரலாற்றின் வைகறை காலத்திலிருந்து தனி கொற்றம் அமைத்து, ஈழத்தமிழர்களின் வரலாற்றில் போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர், பின்னர் பிரித்தானியர்கள் தனித்தனி அரசுகளாக இருந்த ஈழத்தமிழர் தேசத்தையும், சிங்கள தேசத்தையும் நிர்வாக வசதிக்காக ஒரே நாடாக்கி, பிரித்தானியர்கள் 1948 பிப்ரவரியில் வெளியேறியபோது, சிங்களர்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை தந்ததால் ஈழத்தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்கள் ஆக்கப்பட்டனர்.
ஈழத்தமிழர்கள் தந்தை செல்வா தலைமையில் அடிப்படை உரிமைகளுக்காக அறப்போர் நடத்தியபோது, காவல்துறை, இராணுவத்தை சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் மீது ஏவி கொடுமை செய்தது.
1957 இல் சிங்கள அதிபர் பண்டார நாயகா ஈழத்து காந்தி எனப்பட்ட தந்தை செல்வாவோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தையும், 1965 இல் சிங்கள அதிபர் சேனநாயகா, தந்தை செல்வா அவர்களோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் கிழித்துக் குப்பையில் தூக்கிப் போட்டது.
ஈழத்தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டதுடன், சிங்கள அரசின் கொடிய அடக்குமுறைக்கு ஆளானார்கள். எண்ணற்ற தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் நாசமாக்கப்பட்டனர். ஈழத்தில் நடந்த உலகத்தமிழர் மாநாட்டில் 11 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இனி சிங்களவர்களோடு இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்த தந்தை செல்வா அவர்கள் 1975 இல் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுதந்திர இறையாண்மையுள்ள தமிழீழம் என்ற இலட்சியத்தை முன்வைத்து காங்கேசன்துறை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 90 விழுக்காடு வாக்காளர்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றார்.
சிங்கள அரசு ஈழத்தமிழர்களை அடக்கி ஒடுக்கும் போக்கை மாற்றிக் கொள்ளாததால், 1976 மே 14 இல் பண்ணாகம், வட்டுக்கோட்டையில் அனைத்துத் தமிழ் அமைப்புக்களையும் ஒன்றாகத் திரட்டி, இனி சுதந்திர இறையாண்மையுள்ள தமிழீழ தேசம்தான் ஒரே தீர்வாகும். அடுத்து இளைய தலைமுறையினர் இந்த இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லட்டும் என்று பிரகடனம் செய்தார்.
அதன்பின்னரே தமிழீழ இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேதகு பிரபாகரன் அவர்களின் தமிழீழ விடுதலைப் புலிகள் 1975 மே 5 ஆம் தேதி தொடங்கப் பெற்று, சிங்கள இராணுவத்தினரைத் திணறடித்து மாபெரும் சக்தியாக உருவானார்கள்.
1981 இல் யாழ்ப்பாண நூலகத்தை சிங்களக் காடையர்கள் எரித்து ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்களை சாம்பலாக்கினார்கள்.
1983 இல் வெலிக்கடை சிறையில் சிங்களக் கொலைபாதகர்களை ஏவி 53 ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொன்றார்கள்.
1987 இல் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து, டெல்லியில் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி அவர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை புலிகளின் மீது திணித்தார்கள் அதன்படி ஜூலை 29 இல் கொழும்பில் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.
ஆகஸ்டு 4 ஆம் தேதி சுதுமலை பொதுக்கூட்டத்தில் பிரபாகரன் அவர்கள், இந்திய வல்லரசு ஒப்பந்தத்தை தங்கள் மீது திணித்துவிட்டது என்றும், இந்திய அரசோடு மோதுகின்ற எண்ணம் தமக்கு இல்லை என்றும், ஆனால் சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விரைவில் விழுங்கிவிடும் என்றும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இனி இந்திய அரசுக்கு இருக்கிறது என்றும் கூறினார்.
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற ஒப்பந்தத்தை எதிர்த்து தான் பிரச்சாரம் செய்யப் போவதாக ஒரு மாதத்திற்குள் சிங்கள அதிபர் ஜெயவர்த்தனே ஆணவத்தோடு கூறினார்.
விடுதலைப் புலிகளின் தளபதிகள் 17 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து, பலாலி விமான நிலையத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி சிறை வைத்தது. இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளைப் பாதுகாக்க முற்றுகை வளையம் போட்டதை இந்திய அரசு அகற்றச் சொன்னதன் பேரில் சிங்கள இராணுவம் 17 புலிப்படை தளபதிகளையும் தாக்கி கைது செய்ய முனைந்தபோது, குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 தளபதிகள் சயனைடு குப்பிகளைக் கடித்து அக்கணத்திலேயே மாண்டார்கள்.
புலிகளின் தொலைக்காட்சி நிறுவனமும், பத்திரிக்கை அலுவலகங்களும் இந்திய இராணுவத்தால் தகர்க்கப்பட்டன.
தலைவர் பிரபாகரன் அவர்களோடு புலிகள் வன்னிக் காட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவாறு கொரில்லா யுத்தம் நடத்தினர்.
இந்திய அமைதிப் படை ஈழத்தமிழர்களைத் தாக்குகின்ற படை ஆயிற்று.
இந்திராகாந்தி அம்மையார் தலைமை அமைச்சராக இருந்தபோது, 1983 லேயே இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள்தான் அத்தீவுக்கு பூர்வ குடிமக்கள் என்றும், அங்கு நடப்பது ஈழத்தமிழர் இனப்படுகொலை என்றும் அறிவித்திருந்தார்.
இந்திய இராணுவத்துடன் போர் நிறுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று பிரபாகரன் இந்தியப் பிரதமருக்கு எட்டுக் கடிதங்கள் எழுதினார். அனைத்தும் வீணாயிற்று.
இதன்பின்னர் 1989 இல் வி.பி.சிங் இந்தியப் பிரதமரானவுடன் இலங்கையிலிருந்து இந்திய இராணுவத்தை திரும்பி வரச் செய்தார்.
1990 களில் விடுதலைப் புலிகள் பல போர்க்களங்களில் சிங்கள இராணுவத்தை தோற்கடித்தனர். குறிப்பாக 2000 ஆம் ஆண்டில் யானையிறவு சமர்க்களத்தில் தங்களைவிட 20 மடங்கு படை பலமும், ஆயுத பலமும் கொண்ட சிங்கள இராணுவத்தை புலிகள் தோற்கடித்து, உலகத்iத் திகைக்கச் செய்துவிட்டு, 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி புலிகள் தாங்களாகவே 30 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்தனர். மேலும் 30 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டித்தனர்.
இந்தக் கட்டத்தில் நார்வே அரசு இரு தரப்பிலும் பேசி சமாதானம் ஏற்படுத்த முயன்றது. தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிங்கள அதிபர் சந்திரிக குமாரதுங்கா பேச்சுவார்த்தையைச் சீர்குலைத்தார்.
2006 இல் செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறுமிகளை சிங்கள விமானப் படை குண்டு வீச்சில் கொன்று குவித்தது. பிரஞ்சு நாடு ஏற்பாடு செய்த சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த 17 தமிழர்களை குண்டு வீசிக் கொன்றது. தமிழ் நங்கை இசைப்பிரியாவை சிங்கள இராணுவத்தினர் நம் நெஞ்சு நடுங்கத்தக்க வகையில் கூட்டு வன்புணர்ச்சி செய்து, கொடூரமாகக் கொன்றதை சேனல்-4 தொலைக்காட்சி உலகத்துக்கு அம்பலப்படுத்தியது. எட்டு ஈழத் தமிழ் தமிழர்கள் கண்கள் கட்டப்பட்டு, நிர்வாண நிலையில் இராணுவத்தால் கொல்லப்பட்டதையும் சேனல்-4 சாட்சியமாக உலகுக்குக் காட்டியது.
ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் இராணுவ உதவியோடு சிங்கள அரசு ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் நாசமாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர். அடால்ப் ஹிட்லருக்குப் பிறகு நடத்தப்பட்ட கோரப் படுகொலையாக முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர் படுகொலை நடந்தது.
இதற்கெல்லாம் மேலாக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் சிங்கள அரசையும், ராஜபக்சேவையும் பாராட்டி இந்தியாவும், கியூபாவும் 29 நாடுகளின் ஆதரவுடன் அந்தப் பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த நாள் முதல் இந்நாள் வரையிலும் முன்னைய காங்கிரஸ் அரசும், இன்றைய மோடி அரசும் மனித உரிமைக் கவுன்சிலில் சிங்கள அரசின் இனக்கொலையைக் கண்டிக்காமல் அந்த அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் முதல்வரான விக்னேஷ்வரன் அவர்கள் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை ஐ.நா.மன்றம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். தமிழக சட்டமன்றத்தில், சுதந்திரத் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.
1987 ஒப்பந்தத்தில் இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்ற அறிவிப்பை இலங்கையின் உச்சநீதிமன்றம் இரத்து செய்தபோதும், இந்திய அரசு அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை இந்திய அரசும், உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று வீரத் தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தீக்குளித்து மாண்டார்கள்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அர்மீனியாவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டும் என்று ஜெர்மானிய நாடாளுமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த நானிலத்தில் ஈழத்தமிழர்கள் நாதியற்றுப் போனார்கள்.
இந்நிலையில், ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு அனைத்துலக நாடுகளின் சார்பாக ஐ.நா.மன்றம் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை மூடி மறைக்கவும், சுதந்திர தமிழீழ தேச கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவும் இன்றைய சிங்கள அரசு மறைமுகமாக பின்புலத்தில் செயல்பட்டதால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் ஒரு அமைப்பு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யும் வகையில், தமிழீழ மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்களைத் தர வேண்டும் என்று ஒரு போலி நாடகத்தை நடத்த முனைந்து, இந்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று ஒரு கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்தப் பின்னணியை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், உலக நாடுகளும் உணர்ந்து ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை நடத்த முன்வர வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழீழத்துக்கு ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய தமிழகத்தில் உள்ள தமிழர்களும், புலம்பெயர் வாழ் தமிழர்களும் கடமையாற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டறிக்கையின் வாயிலாக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
23.12.2025
