மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு தினப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். அப்போது, தனது அரசியல் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளையும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்குக் கடும் கண்டனத்தையும் அவர் பதிவு செய்தார்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
தமிழக வரலாற்றில் மொழிப்போர் என்பது வெறும் போராட்டமல்ல, அது தமிழினத்தின் அடையாளம் காக்கப்பட்ட பெரும் புரட்சி என்பதை நினைவுகூரும் வகையில், மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நேற்றிரவு மதிமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மதிமுக மாவட்டச் செயலாளர் கொளஞ்சி தலைமை தாங்கினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்ட இவ்விழாவில், மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக ஆட்சிக்கால போராட்ட நினைவுகள்
இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய வைகோ, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, தான் திமுகவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நடந்த ஒரு முக்கியச் சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்:
"மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டம் 17-வது உட்பிரிவில் திருத்தம் கொண்டு வந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியில் மொழிபெயர்க்கத் திட்டமிட்டது. இதனை எதிர்த்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய சட்ட நகல் எரிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால், இந்தப் போராட்டத்தில் பங்கேற்றால் எனது பதவி பறிபோகும் என்று கவலைப்பட்டார். தொண்டனான என்னை பாதுகாக்கும் நோக்கில், போராட்டப் பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்கினார்."
ஆனால் "தலைவரின் கட்டளையையும் மீறி, தமிழின் நலனுக்காகவும், உணர்வுக்காகவும் திருநெல்வேலியில் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினேன். அதன் பின்னர், ஏன் தலைவரின் சொல்லை மீறினேன் என்பதற்கான விளக்கக் கடிதத்தையும் அளித்தேன். பதவி என்பது தமிழுக்குப் பின்னால் தான் என்பதை அன்று நிரூபித்தேன்," என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
அமித்ஷாவுக்கு கடும் கண்டனம்
சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, "தமிழகத்தில் இந்தத் தேர்தலோடு திமுக துடைத்தெறியப்படும்" என்று பேசியதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார். மேடையில் ஆவேசமாகப் பேசிய வைகோ
"தமிழக மண்ணில் திராவிட இயக்கத்தை வேரறுக்க நினைப்பது பகல் கனவு. அமித்ஷா இவ்வாறு பேசுவதற்கு அவருக்கு எவ்வளவு மண்டைக் கொழுப்பு இருக்க வேண்டும்? நான் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால், டெல்லியில் அவர் முன்னிலையிலேயே இதற்குத் தகுந்த பதிலடி கொடுத்திருப்பேன். அமித்ஷாவின் பேச்சு தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்," என்று சாடினார்.
மதவாத சக்திகளுக்கு இடமில்லை
தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்துப் பேசிய வைகோ, மதவாத மற்றும் பிரிவினைவாத சக்திகள் தமிழக மண்ணில் ஒருபோதும் காலூன்ற முடியாது என்றார். மேலும் தொடர்ந்து பேசிய வைகோ, தமிழகம் எப்போதும் பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய சமூக நீதிப் பாதையிலேயே பயணிக்கும். வரும் தேர்தலில் மதவாத சக்திகள் படுதோல்வியைச் சந்தித்து,
தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என தெரிவித்தார்.
இப்பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கொளஞ்சி, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
