தேர்தல் சீர்திருத்தம் என்பது ஜனநாயக மோசடி! வைகோ குற்றச் சாட்டு

தேர்தல் சீர்திருத்தம் என்பது ஜனநாயக மோசடி! வைகோ குற்றச் சாட்டு

தேர்தல் சீர்திருத்தம் என்பது ஜனநாயக மோசடி! வைகோ குற்றச் சாட்டு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், இன்று 11.11.2025 சென்னை தங்கச்சாலையில் நடைபெற உள்ள SIRக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும்

11 நவம்பர், 2025
9 நிமிடம் படிக்க
தேர்தல் சீர்திருத்தம் என்பது ஜனநாயக மோசடி! வைகோ குற்றச் சாட்டு

தேர்தல் சீர்திருத்தம் என்பது ஜனநாயக மோசடி!

வைகோ குற்றச் சாட்டு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், இன்று 11.11.2025 சென்னை தங்கச்சாலையில் நடைபெற உள்ள SIRக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு நிகழ்கால இலக்கணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகளின் ஒருபெரும் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், உணர்ச்சிகரமாக உரையாற்றி அமர்ந்திருக்கின்ற என் ஆருயிர் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களே, கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு அப்பாலும் வெள்ளமென திரண்டிருக்கக்கூடிய இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு அடித்தளம் அமைத்திட்ட சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் அன்புச் சகோதரர் பி.கே.சேகர்பாபு அவர்களே, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குகின்ற சென்னை மாநகராட்சி மேயர் சகோதரி பிரிய ராஜன் அவர்களே,

சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான என் அன்புத் தம்பி ஆர்.டி.சேகர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனிய சகோதரர் டாக்டர் கலாநிதி வீராச்சாமி அவர்களே, பாசமிகு சகோதரர் கிரிராஜன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எபினேசர் அவர்களே, ஐட்ரீம் மூர்த்தி அவர்களே, தமிழ் உலகில் செந்தமிழை மேடைகளில் நிலைநாட்டிய இனமான பேராசிரியர் அவர்களின் பெயரன் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல் அவர்களே, பரந்தாமன் அவர்களே, ஆறடி உயரத்திற்கு மேல் நின்று முழுக் கை சட்டை போட்டுக் கொண்டு நம்முடைய தலைவர் வருகிற நேரமெல்லாம் மெய்க் காப்பாளரைப் போல வந்துகொண்டே இருக்கின்ற சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ரங்கநாதன் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என் அன்புத் தோழர் சண்முகம் அவர்களே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்டத் தலைவர் பீர் முகமது அவர்களே, வடசென்னை மாவட்டத் தலைவர் டில்லி பாபு அவர்களே, மத்திய சென்னை மேற்கு மாவட்ட அவைத் தலைவர் கண்ணியமிகு அகமது  அவர்களே, செய்தியாளர்களே, தொலைக்காட்சி ஊடக நண்பர்களே, அலை அலையாக திரண்டு வந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாசமிகு தோழர்களே வணக்கம்.

சரியான சுள் என்ற வெயிலில் நான் உள்ளே நுழைந்தேன். இயற்கை நமக்கு மிக ஆறுதலாக இருக்கிறது. இப்பொழுது வானம் குடை பிடிக்கிறது. வெயிலைக் காணோம். வானம் கண்ணாமூச்சு விளையாடுகிறது. போர்க்களத்திற்குப் போகிறார்கள். இவர்களைக் களைப்படையச் செய்துவிடக் கூடாது. சிறிது வெயிலைக் காட்ட வேண்டும். பின்பு நிழலைக் காட்ட வேண்டும். பின்பு தென்றல் வீச வேண்டுடும் என்ற வகையில் மிகுந்த ஆரோக்கியமான இயற்கையின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்ற வாய்ப்பை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக்கு என்னுடைய மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பேராபத்து நம்மை நோக்கி வருகிறது. சிரத்தையே வெட்டக் கூடிய கொடுவாள் - கொலை வாள் நம் உச்சந்தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்தின் ஆதார சுருதி வாக்குரிமை. பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள் நிறைந்திருக்கக்கூடிய இமயம் முதல் குமரி வரை பரந்திருக்கக்கூடிய இந்த உபகண்டத்துக்கு, நாடு சுதந்திரம் அடைந்தவுடன், உலகில் இதுபோன்ற ஒரு அரசியல் சட்டத்தை எந்த அறிஞனும் ஏற்படுத்தவில்லை என்று சொல்லக்கூடிய வகையில், இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை யாத்துத் தந்தவர் மாமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆவார்.

சுதந்திரம் கிடைத்தவுடன் அனைவருக்கும் ஓட்டுரிமை எந்த ஜனநாயக நாடும் தந்தது இல்லை. இது நம்முடைய உரிமை. அனைத்து மக்களும் வாக்களித்தால்தான், யார் அரசோட்ச வேண்டும் என்று முடிவெடுக்க முடியும்.

அரசியல் நிர்ணய சபைகூட கோடானு கோடி மக்களின் பிரதிநித்துவம் அல்ல. சொத்துரிமை உடையவர்கள். பட்டம் வாங்கியவர்களுக்கு மட்டும்தான் அரசியல் நிர்ணய சபையில் உரிமை வழங்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எல்லாவற்றையும் யோசித்து, முதலில் நாட்டுக்கு எது உகந்தது? என்று தீர்மானித்து அரிச்சுவடியைத் தருவோம்; ஆத்தி சூடியைத் தருவோம்; ஓட்டுரிமையைத் தருவோம் என்று அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கினார்.

யார் நம்மை ஆள்வது? ஆட்சி லகானை யார் கையில் ஏந்துவது? என்பதைத் தீர்மானிக்கின்றவர்கள்தான் வாக்காளப் பெருமக்கள். அவர்கள்தான் ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள். அவர்களுடைய வாக்குரிமையையே பறிக்க நினைக்கிறார்கள்.

இந்துத்துவா சனாதனக் கூட்டமும், நஞ்சாக உருவாகி வருகின்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டமும் ஒன்று சேர்ந்து  2022 பிப்ரவரி மாதத்தில் அலகபாத் நகரில் தர்மசன்சத் என்ற மாநாட்டைக் கூட்டினார்கள். அந்த மாநாட்டில், 32 பக்கங்களைக் கொண்ட ஒரு பிரகடனம் வெளியிட்டார். அதன் சுருக்க்ததைத் தருகிறேன். உங்களுக்கு மிகச் சுருக்கென்று தைக்கும்.

இனிமேல் இந்த நாட்டிற்கு இந்தியா என்ற பெயர் கிடையாது. பாரத் என்றுதான் அழைக்க வேண்டும்.

இந்தியாவுக்கு டெல்லிப் பட்டணம் தலைநகராக இருக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ். நச்சு மரத்தை வளர்த்த வாரணாசிதான் இந்தியாவின் தலைநகராக இருக்கும்.

இந்தியாவில் வாழ்கின்ற கோடானு கோடி முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஓட்டுரிமை கிடையாது.

இந்தியாவில் இனி இரண்டே மொழிகள்தான் இருக்கும். ஒன்று செத்துப்போன சமஸ்கிருத மொழி. மற்றொன்று நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தீரர்களால், மொழிப்போர் சிப்பாய்களால் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட வைத்தார்களே அந்த நாசகார இந்தி. இவை மட்டும்தான் இந்த நாட்டினுடைய ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும்.

இதனை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. சனாதன சக்திகள் எதிர்க்கவில்லை.

இதை செயல்படுத்த என்ன வழி முதல் வழி, தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவது. ஓட்டுரிமையைப் பறிப்பது. குடியுரிமையைப் பறிப்பது.

வெள்ளைக்காரன் படையெடுத்து வந்தான் வியாபாரம் செய்ய. பின்னர் நாட்டையே ஆளத் தொடங்கினான். தலைவர்களின் மகத்தான தியாகத்தாலும், இலட்சக்கணக்கான மக்களுடைய இரத்தத்தாலும், அண்ணல் காந்தியாடிகள் தலைமையில் ஜனநாயகத்தின் இலக்கணமாகத் திகழ்ந்த பண்டித நேருவும் ஆயுதத்தைக் கொண்டு சென்று இந்த நாட்டை மீட்க முடியும் என்று முடிவெடுத்து, வெள்ளைக்கார காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கல்கத்தாவில் இருக்கும் தன் வீட்டை விட்டு வெளியேறி, காபூல், ஆப்கானிஸ்தான் வழியாக ரஷ்யாவுக்குச் சென்று, அங்கிருந்து ஜெர்மனிக்குச் சென்று சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருடன் கை குலுக்கியபோது, இந்தியர்கள் ஜனநாயகத்திற்கு லாயக்கற்றவர்கள், அருகதையற்றவர்கள் என்று ஹிட்லர் கூறினார்.

நேதாஜியை அழைத்துச் சென்றவர்கள் அடுத்து இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்தார்கள். ஜெர்மனியில் ஹிட்லரை எதிர்த்து புருவத்தை நெரித்தால் அடுத்து பத்தாவது நிமிடம் அவன் சுட்டுக் கொல்லப்படுவான்.

நேதாஜி அவர்கள், ஹிட்லர் அவர்களே தயவு செய்து நிறுத்துங்கள். எங்கள் இந்திய நாட்டு மக்கள் ஜனநாயகத்தைக் காக்கும் வல்லவர்கள்; நடத்தவும் வல்லவர்கள். நீங்கள் கூறிய வார்த்தைகளை நீங்கள் திரும்பப் பெற வேண்டும் என்றார். வெல வெலத்துப் போனான் அடால்ஃப் ஹிட்லர். அப்படிப்பட்ட நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து, பலமுறை தாக்குதல் நடத்தினார்.

தலைவர்கள் ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடி, பல தேசிய இனங்களாக பிரிந்து உள்ள இந்திய உபகண்டத்திற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்கள்.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. அண்ணா முதலமைச்சரானதற்குப் பின்பு, நான் பிரிவினையைக் கைவிட்டுவிட்டேன். ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உயிரோடு இருக்கின்றன என்று 1967 ஜூன் மாதம் சட்டசபையில் முழங்கியதோடு, அபர்ட்ஸ்பரி மாளிகையில் நடைபெற்ற மாணவர் திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் நான் பிரிவினையைக் கைவிட்டுவிட்டேன் என்று சொல்கிறார்கள். அதைக் கேட்டதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று கூறினார். (அடியேனும் அதில் உரையாற்றியனேன்)

இந்த மண்ணுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று எண்ணியபோது, விருதுநகர் மாரியம்மன் கோயில் திடலில் 72 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த உத்தமர் சங்கரலிங்க நாடாரின் கனவை நனவாக்க, இந்தத் தாயகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கூறினார்.

இப்போது நம்மைச் சுற்றி வளைத்து அடிப்பதற்கு இந்த எஸ்.ஐ.ஆரைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

S என்றால், Sabotage சீர்குலைப்பது.

I என்றால், Intolerable  தாங்க முடியாதது.

R என்றால், Remagadism 

இதுதான் SIR.

வாக்குரிமைகளைப் பறிப்பதற்கு தேர்தல் ஆணையத்தின் உத்திகளில் ஒன்றுதான் இது.

நேற்றைக்கு நான் சென்றிருந்த ஊரில் இந்தப் பதிவை செய்துகொண்டிருந்த நான்கு சகோதரிகள் என்னைச் சந்தித்தார்கள். அவர்களிடம், இந்த ஊரில் மொத்தம் எத்தனை வாக்காளர்கள்? என்று கேட்டேன். 960. இந்த ஐந்து நாட்களில் எத்தனை வாக்காளர்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டேன் 600 பேரை பதிவு செய்திருக்கிறோம் என்றார்கள். மற்றவர்கள் வீடுகளில் இல்லை என்றார்கள். எங்கே இருக்கிறார்கள் என்ற முகவரி தெரியவில்லை. பின்னர் அவர்களாக முயற்சித்து விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். ஏறத்தாழ 75 இலட்சம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசும், அதற்கு எடுபிடியாக இருக்க்கூடிய இந்தியத் தேர்தல் ஆணையமும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.

இதை எதிர்ப்பதைவிட, தகர்ப்பதைவிட நமக்கு என்ன வேலை? எங்களது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற அவசியம்கூட கிடையாது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குடிமகனும் இதை எதிர்க்க வேண்டும்.

அடிமைத்தனத்திற்கு நடை பாவாடை விரித்து பல்லாக்கு தூக்குகின்ற எடப்பாடிக்கும் சரி, அரசியல் என்றால் அ, ஆவண்ணாகூட அறியாத, அரிச்சுவடி கூட தெரியாத, ஆத்தி சூடி கூட படிக்காத, நான் திரையுலகத்தில் ஜொலித்தேன். இப்பொழுது மக்களிடம் சென்று ஆட்சியைப் பிடிப்பேன் என்று புறப்பட்டிருக்கின்ற நடிகர் அடுத்து வரப்போவது எங்கள் ஆட்சிதான் என்று இரவு கனவில் உளறுவதைப் போல உளறிக் கொண்டிருக்கிறார்.

இங்கே திரண்டிருக்கின்ற கூட்டத்தினரைப் பாதுகாக்க சேகர்பாபுவும் மற்றவர்களும் குடிதண்ணீர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆம்புலென்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

குழந்தைகள், தாய்மார்கள் என்று பெரும் வெள்ளமென பார்ப்பதற்குத் திரண்டவர்களை, ஏழரை மணி நேரம் காக்க வைத்து, குடிதண்ணீருக்கும் ஏற்பாடு செய்யாமல், மருத்துவ வசதி உள்ளிட்ட எந்த ஏற்பாடும் செய்யாமல், பெரும் கூட்டம் வந்து, அடிபட்டு செத்தது என்றால் நமக்கு இன்னும் பெயர் கிடைக்கும் என்று பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் உட்பட 41 உயிர்கள் படு பயங்கரமாக கரூர் வீதியில் செத்து விழுந்தபோது, இந்த மனிதர் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை திருச்சியை நோக்கி ஓட்டிச் சென்று, அங்கே தங்காமல் சென்னை பட்டினத்துக்கே வந்துவிட்டார்.

ஆனால் நாட்டின் முதலமைச்சரோ, அனைத்துக் கட்சியினருக்கும் நான்தான் முதலமைச்சர். அனைத்து சாதி, மத மக்களுக்கும் நான்தான் முதலமைச்சர். ஜனநாயகம் எனக்கு அந்தப் பட்டயத்தை வழங்கியிருக்கிறது. என் மாநிலத்து மக்கள் என்னுடைய மக்கள். அவர்கள் எதைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை வேதனைப்பட விடமாட்டேன் என காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சித்  தலைவர்களும் கரூருக்குச் செல்லுங்கள்.  சம்பவ இடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் செல்லுங்கள் என கூறிவிட்டு, இரவோடு இரவாக அந்த நள்ளிரவு வேளையிலேயே புறப்பட்டுச் சென்று, உயிரற்ற சடலங்களுக்கு மலர் வளையம் வைத்துவிட்டு, மருத்துவர்களுக்குக் கூற வேண்டிய அறிவுரைகளைக் கூறிவிட்டு, உற்றறார் உறவினரின் கண்ணீரைத் துடைப்பதற்கு இரங்கல் தெரிவித்தார்.

யார் முதலமைச்சர்? அந்த மாநிலத்தின் அனைத்து மக்களின் சுக துக்கங்களிலும் பங்கேற்பவர்தான் ஒரு முதலமைச்சராக இருக்க முடியும். அப்படி ஒரு முதலமைச்சர் என்று நிருபித்தவர் நம்முடைய ஆருயிர் சகோதர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

இதற்குப் பின்பு சட்டமன்றத்தில் பேசும்போதுகூட, கலை உலகத்திலிருந்து வந்தவர் பெயரையும் உச்சரிக்கவில்லை. அந்தக் கட்சியின் பெயரையும் சொல்லவில்லை. பெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு ஏற்பாடுகள், மருந்து ஏற்பாடுகள் அனைத்தையும் அவர்கள்தான் செய்யும் பொறுப்புள்ளவர்கள் என்று கூறினார்.

அந்த நடிகரின் வேன் ஒரு மைல் நீளத்திற்கு இருக்கிறது. ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவிற்குத் திரும்ப முடியாது. அதில் ஏறி நின்றுகொண்டு, காவல்துறைக்கு என் முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு கூட்டத்திலும் என்னை பத்திரமாக, பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்த்ததற்கு தமிழ்நாடு காவல்துறைக்கு நான் பாராட்டுத் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

நான் ஒரு கிராமத்துக்காரன். வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால், எல்லோரும் பகை மறந்துவிட்டு அந்த வீட்டிற்குச் சென்று, சடலத்துடன் மயானம் வரை சென்று இரங்கல் தெரிவிப்பது வழக்கம். மறுநாளோ, மூன்றாம் நாளே தொலை தூரத்திலிருந்து வந்தால், இறந்தவரின் படத்திற்கு பூ தூவி இரங்கல் தெரிவிப்பது வழக்கம். நடு கல் நடுவது வழக்கம்.

ஆனால் இந்த மனிதர் 45 நாள் கழித்து, என்னைப் பார்க்க வாருங்கள் என்று உயிர்ப் பலியானவர்களின் குடும்பத்தினரை வரவழைத்தார். என்னைப் பார்க்க வாருங்கள் என்று ஆண்டவன்கூட சொல்ல மாட்டானே! அப்படி அழைத்து, பணம் கொடுத்துவிட்டு, இறந்துபோனவர்களுக்காக நான் அனுதாபம் தெரிவிக்கிறேன் என்று கூறுகிறார்.

துளியளவு குற்ற உணர்ச்சி இல்லாமல், அணு அளவும் பொறுப்புணர்ச்சி இல்லாமல், திரைப்படங்களில் வசனம் பேசுவது போன்று மேடையிலும் வசனம் பேசுகிறார்.

“அங்கிள் சொல்லுங்க” என்னய்யா அங்கிள், டிங்கிள். என்ன சினிமாவில் நடிக்கிறாயா?  மக்ககள் மன்றத்திற்கு வந்திருக்கிறாய். யாரைச் சொல்கிறாய்? எட்டுக் கோடி தமிழர்களை வழிநடத்தி, உலகுவாழ் தமிழர்கள் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய முதலமைச்சரைப் பார்த்தா சொல்கிறாய்? என்ன நா தடித்தனம் இருந்தால், என்ன மன அழுத்தம் இருந்தால், என்ன அகம்பாவம் இருந்தால் ‘அங்கிள்’ என்று தொடர்ந்து சொல்வாய்?

ஒரு நல்ல தச்சரை அழைத்து, ஒரு நாற்காலியைச் செய்துதரச் சொல்லி, ஒரு அமாவாசை இருட்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு எதிரே போட்டு அமர்ந்துகொண்டு, செயின்ட் ஜார்ஜ் கோட்டை என் பக்கம் வந்துவிட்டது. நான் இந்த நாட்டுக்கு முதலமைச்சராகிவிட்டேன் என்று வேண்டுனமால் நீ சொல்லலாம்.

19 வயதில் அரசியலுக்கு வந்தேன். இதே வடசென்னை கோகலே மண்டபத்தில் 1964 ஆகஸ்ட் 21 இல் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு முன்பு இந்தி ஏகாதிபத்தியம் என்று உரையாற்றி, அந்த இரவில் நுங்கம்பாக்கம் அண்ணா வீட்டிற்குச் சென்றபோது, என்னிடத்தில், உன் ஊர் எது? என்று கேட்டுவிட்டு, நன்கு பேசினாய் என்று பாராட்டைப் பெற்று, திராவிட முன்னேற்றக் கழகத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி, 29 முறை சிறை சென்றவன்.

அதன்பிறகு கால விசித்திரத்தின் காரணமாக தவிர்க்க இயலாமல் உருவாக்கப்பட்ட மறுமலர்சசி திராவிட முன்னேற்றக் கழகத்தில் 31 ஆண்டுகள் கழிந்துவிட்டன. நான் பொதுவாழ்வுக்கு வந்து 61 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இனி எஞ்சியிருப்பது எத்தனை நாட்கள்? எத்தனை மாதங்கள்? எத்தனை வருடங்கள்? என்று எனக்குத் தெரியாது. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறேன்.

எனை ஈன்ற தாய் நாட்டிற்கும், அன்னைத்  தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுக்கும் இடைவிடாது போராடி, 31 முறை சிறை சென்றது மட்டுமல், ஏழாயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் சென்றிருக்கிறேன். ஊருக்குள் நடந்துவிட்டு, ஊர் எல்லையில் காரில் ஏறி செல்பவன் அல்ல வைகோ. நெடுகிலும் நடந்து கால்கள் கொப்பளிக்க தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்காகப் போராடியிருக்கிறேன்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்துப் போராடியபோது, துப்பாக்கிச் சூட்டில் பலர் மடிந்துவிட்டார்கள் என்றவுடன், அந்த இரவு 9 மணிக்கே தூத்துக்குடி நகரத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களையும், பாதிக்கப்பிட்டவர்களின் குடும்பத்தினரையும் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். தாய்மார்கள் தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பினார்கள்.

முன்னாள் நீதிபதிகளையும், முன்னாள் காவல்துறை அதிகாரிகளையும் வைத்து 2400 பக்கத்திற்கு Sterlite tragedy; Starlite killing என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்.

எங்கே துக்கம் துயரம் நேர்ந்தாலும் நம்முடைய திருமாவளவன் அவர்கள் நீல வண்ணத்தில் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடி காரின் முகப்பில் படபடத்துப் பறக்க அந்த மக்களுக்கு தைரியமும், ஆறுதலும் கூறினார். இப்படிப்பட்ட எங்களுக்கு இதைப் பற்றிப் பேசுவதற்குத் தகுதி இருக்கிறது.

SIR மூலமாக வாக்குரிமையைப் பறிப்பது மட்டுமல்ல, நம் குடியுரிமையையும் பறிப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். நான் பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்கிறேன், இந்த மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையை, வாக்குரிமையைப் பறித்ததற்குப் பின்பு, இந்த நாட்டை எங்கள் நாடு என்று நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்? இது எங்களுடைய நாடு என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கட்டத்திற்குக் கொண்டுபோய் விட்டுவிடாதீர்கள். இந்த SIR நிறுத்தப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் அதற்கு பின்பாட்டு பாடுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றத்தில் வாதிடுகிறது. சிறுத்தைகள் வாதிடுகின்றார்கள். கம்யூனிஸ்டுகள் வாதிடுகின்றார்கள். காங்கிரஸ் வாதிடுகிறது. நானும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறேன்.

நாடு முழுவதும் இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் நம்முடைய கூட்டணிக் கட்சியின் தலைவர் அவர்கள் மாநிலமெங்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.

SIR என்பது அயோக்கியத்தனமான நகர்தல். இது நமது வாக்குரிமையை மட்டுமல்ல, குடியுரிமையையும் பறிக்கப் பார்க்கிறது.

தமிழ்நாட்டு மக்களே நீங்கள் வீடுகளில் தங்கியிருங்கள். நீங்கள் வெளியே காடு கழனிகளுக்குச் சென்றால், தறி நெய்யச் சென்றால், ஆலையின் சங்கொலி கேட்கின்ற இடத்தில் வேலை செய்யச் சென்றால், சொந்த பந்தம் காரணமாக வெளியூருக்குச் சென்றால், சுற்றுலாவுக்காக வேறு நகருக்குச் சென்றால் உங்கள் வீட்டில் வாக்காளர் பதிவு நடக்கிறதா? என்று அறிந்துகொண்டு உடனே வீடு திரும்புங்கள்.

ஒரு பக்கம் போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கும். பெயர்கள் விடுபட்டுப் போகாமல் அவற்றை பதிவு செய்யுங்கள். ஆதார் அட்டையையே அர்த்தமாற்றதாக ஆக்கி வருகிறது தேர்தல் ஆணையம். ஜால்ரா தட்டுகிறது. அதற்கான முயற்சியை இந்துத்துவா கூட்டம் எடுத்திருக்கிறது.

வெளி மாநிலங்களிலிருந்து இங்கே வந்தவர்களை வந்தாரை வரவேற்று, அவர்களிடத்தில் அன்பு காட்டி விருந்தோம்பும் பண்பும் தலைமுறை தலைமுறையாக தமிழனின் பண்பு. தமிழ்நாட்டின் பண்பு. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது ஒருவரை, இந்தத் தமிழ்நாட்டில் எவராவது ஒருவர் கை நீட்டியது உண்டா? கடுமொழி பேசியது உண்டா? அவர்களை வெளியே போ என்று சொன்னது உண்டா? அவர்கள் சௌகரியமாக சம்பளம் வாங்கி, பணத்தை அவர்களது வீட்டுக்கு அனுப்புகிறார்கள். பண்டிகை காலங்களில் ஊருக்குச் சென்றுவிட்டு வந்து பணியாற்றுகிறார்கள். அவர்கள் நன்றாக இருக்கட்டும்.

ஆனால், அப்படி 75 இலட்சம் வாக்காளர்களை நமது வாக்காளர் பட்டியலில் திணிப்பதற்காக ளுஐசு மூலமாக தேர்தல் ஆணையம் செய்துகொண்டிருக்கிறது. கொட்டும் மழை காலமான நவம்பர், டிசம்பர் மாதத்தில், பண்டிகைகள் நெருங்கி வரும் வேளையில் இப்படி கணக்கெடுப்பு பொறுப்பற்ற தன்மை? போக்கிரித் தன்மை என்தை நாம் உணர வேண்டும்.

SIR ஒழியட்டும்; அழியட்டும்; தகர்க்கப்படட்டும். நாம் விழிப்போடு எழுந்து நின்று நம் வாக்குரிமையைப் பதிவு செய்வோம். தேர்தல் களத்தைப் பற்றி எங்களுக்குத் துளியும் அச்சமில்லை. கவலையில்லை. வரட்டும் தேர்தல், அந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை இப்போது பெற்ற வெற்றியைவிட அதிகப்படியான வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

செயின் ஜார்ஜ் கோட்டையில் நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக அமர்வதற்கு உறுதி எடுத்துக் கொள்வோம்.  சபதம் ஏற்போம். ஒழியட்டும் SIR என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரையற்றினார்.

பகிர்