மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் தீர்மானங்கள்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை கலந்துரையாடல் கூட்டம் 27.12.2025 அன்று தலைமைக் கழகம் தாயகத்தில் சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் சூரி.நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1 :
அரசியலில் சமரசம் செய்யாத தலைவர் நடைபயண நாயகர் திருமிக வைகோ அவர்கள் 2026 ஜனவரி 2- ஆம் தேதி திருச்சி உழவர் சந்தையில் தொடங்கி ஜனவரி 12- ஆம் தேதி மதுரை ஒப்பிலாபுரத்தில் நிறைவடையும் சமத்துவ நடைபயணம் மாபெரும் வெற்றி பெற மறுமலர்ச்சி சட்டத்துறை வாழ்த்தி வணங்குகிறது.
தீர்மானம் 2 :
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பங்கு வகிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்காகவும் சிறப்பாக பணியாற்றி நமது கூட்டணியை மாபெரும் வெற்றி பெற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை வழக்கறிஞர்கள் முன்னின்று பணியாற்றுவார்கள் என்பதோடு, கழக வளர்ச்சிக்கும் காவல் அரணாக இருந்திடுவோம் என்றும் இக்கூட்டம் உறுதி ஏற்கிறது.
தீர்மானம் 3 :
இந்திய தேசத்தின் தந்தையும், வழக்கறிஞராகவும் இருந்த மகாத்மா காந்தியடிகளின் பெயர் கொண்ட “மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்” என்ற பெயரினை நீக்கி புரியாத மொழியில் பெயர் வைத்த ஒன்றிய அரசினை இந்த சட்டத்துறை வழக்கறிஞர்களின் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் 4 :
காலத்தின் தேவைக்கேற்பவும், அலைச்சலை தவிர்க்கவும், கீழ்த்தட்டு மக்கள் எளிதாக அணுகும் வகையிலும் நீண்டகால கோரிக்கையான உச்சநீதிமன்றத்தின் கிளையினை சென்னையில் அமைத்திட ஒன்றிய அரசினை இந்த சட்டத்துறை வழக்கறிஞர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5 :
நீதிமன்றங்களில் ஆன்லைன் முறையில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்ற பணியாளர்களுக்கும் ஏற்படும் சிரமங்கள், காலதாமதங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் உடனடியாக முழுமையான ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறையினை வலுக்கட்டாயமாக திணித்துள்ள ஒன்றிய அரசைக் கண்டிப்பதோடு, வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகளை கலந்து பேசி தற்போது நடந்து கொண்டிருக்கும் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தக்க தீர்வு காணுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 6 :
வழக்கறிஞர் சமூகத்திற்கு பயனளிக்கும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற முன்வருமாறு இந்திய ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7 :
கழக வழக்கறிஞர் அணியைப் பலப்படுத்தும் வகையில் அனைத்து நீதிமன்றங்களிலும் கழக வழக்கறிஞர் குழுவை உருவாக்குவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
27.12.2025
