தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றிபெற்று திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், இயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் காங்கிரஸ், ஐயூஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதுடன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தன. இதனிடையே தேர்தலுக்குப் பிறகு தவெக ஆதரவு நிலைபாட்டில் இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணைந்தார். ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏக்கள் இரண்டு பேரும் திமுகவுடன் இருப்பதாக அறிவித்தன.
இதனிடையே கடந்த மாதம் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் திமுக பங்கேற்கவில்லை. மேலும் நாடாளுமன்றத்தில் தனி இருக்கை கோரி சபாநாயகருக்கு திமுக கடிதம் எழுதிய நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
இப்படிப் பட்ட சூழலில் டெல்லி சென்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மதிமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது” என்றார். மேலும், மும்மொழிக் கொள்கை குறித்த கேள்விக்கு, “நாங்கள் ஆரம்பத்திலிருந்தே. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து வருகிறோம். அதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று அவர் கூறினார்.
