ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு கோரிக்கை இங்கு எடுபடாது' - வைகோ தடாலடி

ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு கோரிக்கை இங்கு எடுபடாது' - வைகோ தடாலடி

தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும் போது ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைகள் எடுபடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

12 February 2026
2 min read
Etv Bharat
ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு கோரிக்கை இங்கு எடுபடாது' - வைகோ தடாலடி

தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும் போது ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைகள் எடுபடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில் ”இந்திய இறையாண்மையை அடகு வைப்பது போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு கொத்தடிமையாக ஆகிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தின் மக்களவையில் பதிவு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டை நான் அப்படியே வழிமொழிகிறேன்.

சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை, நாங்கள் திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகின்ற முதலமைச்சர் ஸ்டாலின்தான், மீண்டும் முதலமைச்சராக வருவார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவர் உரிமை. ஆனால், தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும் போது இந்த கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது. மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் கூட்டணியில் எவ்வித நிபந்தனையும் விதித்தது கிடையாது” என்றார்.

பின்னர், வந்தே மாதரம் பாடல் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது தொடர்பான கேள்விக்கு, “பங்கீம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலை முழுமையாக ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பாடவிட்டு, தேசிய கீதம் பாட வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு அக்கிரமமான சட்ட மசோதா ஒன்றை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. இது எச்சரிக்கை மணி.

அடுத்து டெல்லிக்கு இந்திர பிரசாத் என்று வேறு பெயர் வைக்க வேண்டும், தலைநகரை வாரணாசிக்கு மாற்ற வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். திட்டம் தீட்டி வருகிறது. படிப்படியாக இந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் முயற்சிக்கிறார்கள். எல்லாரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார்.மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதால் பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என எம்.பி கனிமொழி தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு, ”சகோதரி கனிமொழி கூறியதை நான் நூறு சதவீதம் வழிமொழிகிறேன்” என்றார்.

Newspaper Clipping

Newspaper clipping

Share this article