புதன் கிழமை சென்னையில் ம.தி.மு.க முக்கிய ஆலோசனை: தி.மு.க கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் அதிருப்தி

புதன் கிழமை சென்னையில் ம.தி.மு.க முக்கிய ஆலோசனை: தி.மு.க கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் அதிருப்தி

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தி.மு.க மற்றும் ம.தி.மு.க (MDMK) இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. ம.தி.மு.க.வின் அவசர உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நாளை (மார்ச் 11) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில், தொகுதிப் பங்கீடு மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

10 March 2026
1 min read
The Indian Express Tamil
புதன் கிழமை சென்னையில் ம.தி.மு.க முக்கிய ஆலோசனை: தி.மு.க கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் அதிருப்தி

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தி.மு.க மற்றும் ம.தி.மு.க (MDMK) இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

ம.தி.மு.க.வின் அவசர உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நாளை (மார்ச் 11) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில், தொகுதிப் பங்கீடு மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க.வுக்கு 4 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 5 இடங்களை ஒதுக்க தி.முக. முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் மதிமுகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. எனவே, இந்த முறையும் அதேபோல் 6 இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதில் ம.தி.மு.க. தரப்பு உறுதியாக உள்ளது.

இடங்களின் எண்ணிக்கையைத் தாண்டி, எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் இரு கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. வரும் தேர்தலில் ம.தி.மு.க. தனது சொந்த தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என்பதில் வைகோ உறுதியாக உள்ளார். ஆனால், ம.தி.மு.க. தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தி.மு.க தரப்பில் இன்னும் முழுமையான சம்மதம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த முறையைப் போலவே 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று தி.முக. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஒருவேளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சூழல் ஏற்பட்டால், கடந்த முறையைப் போல 6 இடங்களைக் கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று ம.தி.மு.க கோரி வருகிறது. இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ம.தி.மு.க.வும் தனது அடுத்தகட்ட நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. மற்றும் ம.தி.மு.க இடையிலான இறுதித் தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this article