கடந்த தேர்தலை விட குறைவான தொகுதியை ஏற்றது ஏன்? மனம் திறந்த வைகோ

கடந்த தேர்தலை விட குறைவான தொகுதியை ஏற்றது ஏன்? மனம் திறந்த வைகோ

கருணாநிதிக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக திமுக குறைத்துக் கொடுத்த தொகுதிகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

17 March 2026
2 min read
Etv Bharat
கடந்த தேர்தலை விட குறைவான தொகுதியை ஏற்றது ஏன்? மனம் திறந்த வைகோ

கருணாநிதிக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக திமுக குறைத்துக் கொடுத்த தொகுதிகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (மதிமுக) 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை அது குறைக்கப்பட்டு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், 1 தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிடவுள்ளது.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 17) வெளியிட்டார். சென்னை மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ, தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அம்சங்கள் மட்டுமின்றி, திமுக உடனான உறவு மற்றும் தொகுதி குறைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தொகுதி குறைத்துக் கொடுத்ததை ஏற்றுக்கொண்டது ஏன்?

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதனால் முதலமைச்சருக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டு உள்ளது. நிறைய கட்சிகளின் நிர்பந்தம் இருக்கிறது. எனது 62 வருட அரசியல் வாழ்வில் 32 வருடம் திமுகவுடன் பயணத்திருக்கிறேன். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் இறுதி நாட்களில் நான் அவரிடம் ஒரு வாக்கு கொடுத்தேன். ஒரு காலத்தில் உங்களுக்கு பக்க பலமாக நான் இருந்தது போல தம்பி ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன் என வாக்கு கொடுத்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இதனை ஏற்றுக் கொண்டேன். அந்த நிலையில் என் கையை முதலமைச்சர் பிடித்துக் கொண்டார். அவர் சொன்ன தொகுதிகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேன். எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அது சற்று வருத்தமளித்தாலும், அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். தொகுதிகள் குறைத்ததை பொருட்டாக நினைக்கவில்லை” என்றார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்த பிறகு எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதைப் பற்றி முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

72 பக்கங்களில் தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை குறித்து பேசிய அவர், “ சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து, மூன்று வாரம் மாநிலத்தின் பல பகுதியிலிருந்து வந்த பரிந்துரைகளை பரிசீலனை செய்தது. அதன்படி, 72 பக்க தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கை 51 பிரிவுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. கொள்கை லட்சியங்கள், நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள், முக்கிய நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்து இதனை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் அறிக்கை 51 பிரிவுகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. கொள்கை லட்சியங்கள், நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள், முக்கிய நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்து இதனை வெளியிட்டு உள்ளோம்” என தெரிவித்தார்.

போதைப்பொருளை தடுக்க புதிய சட்டம்

தமிழ்நாடில் பாலியல் வன்கொடுமை குறைந்து வருவதாகவும், முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”விளாத்திகுளம் மாணவி சம்பவத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களுக்கு முக்கிய காரணம் போதைப்பொருள் பழக்கமாகும். போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். மதுவிலக்கு ஒழிக்க வேண்டும் என்பது எங்களுடைய கொள்கை. அரசு துறைகளில் தனியார்மயத்தை நீக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.

சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு பிரதமரே காரணம்

இந்திய அளவில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்த பேசிய அவர், "சமையல் கேஸ் தட்டுப்பாட்டுக்கு பிரதமர் மோடி தான் காரணம். அவர் அமெரிக்காவின் ஊது குழலாக செயல்படுகிறார். கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு கனிம வளம் கடத்தப்படுவதை தடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், காவல்துறையினர் கண்களில் மண்ணைத் தூவி விட்டு சிலர் அதை தொடர்ந்து கடத்துகின்றனர். கனிம வளங்களை கடத்துபவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத அளவு கடுமையான தண்டனைகள் உடன் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

Newspaper Clipping

Newspaper clipping

Share this article