ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென பேசியதில்லை – வைகோ

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென பேசியதில்லை – வைகோ

ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதை தி.மு.க.,வோ, ம.தி.மு.க.,வோ கூட்டணி கட்சிகளோ எதிர்க்கவில்லை – நடை பயணத்தின்போது வைகோ பேட்டி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென தப்பித் தவறியும் கூட பேசியதில்லை என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

8 ஜனவரி, 2026
2 நிமிடம் படிக்க
The Indian Express Tamil
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென பேசியதில்லை – வைகோ

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென பேசியதில்லை – வைகோ

ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதை தி.மு.க.,வோ, ம.தி.மு.க.,வோ கூட்டணி கட்சிகளோ எதிர்க்கவில்லை – நடை பயணத்தின்போது வைகோ பேட்டி
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென தப்பித் தவறியும் கூட பேசியதில்லை என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

திருச்சியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஜனவரி 2 ஆம் தேதி சமத்துவ நடைபயணத்தை தொடங்கினார். வரும் 12 ஆம் தேதி மதுரையில் பயணத்தை நிறைவு செய்கிறார். 

இந்நிலையில், தனது 7 ஆவது நாள் பயணத்தை மேலூர் அருகிலுள்ள கொட்டாம்பட்டியில் இருந்து தொண்டர் படையினருடன் வைகோ இன்று தொடங்கினார். அவருக்கு வழிநெடுகிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

கொட்டாம்பட்டி அருகிலுள்ள கருங்காலக்குடி என்ற ஊரில் செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது; 

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினை வாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அது முறியடிக்கப்படும். மத்திய அமைச்சர் அமித் ஷா ஆணவம், அகம்பாவம் மிக்க வார்த்தைகளை தமிழக மண்ணுக்கு வந்து சொல்லிவிட்டு போகும் துணிச்சல் வந்துள்ளது. வியர்வை, ரத்தம் சிந்தி எண்ணற்றவர் உயிர் பலி கொடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி கட்டிக் காத்த திராவிட கோட்டை வெறும் எஃகு இரும்பால் கட்டப்பட்டது அல்ல. ரத்தமும், சதையுமாக இருக்கும் மனிதர்களின் உயிர் பலியால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கும், தி.மு.க அரசுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. எத்தனையோ திரைப்படங்கள் தணிக்கைத் துறையால் சிறிது தாமதம் செய்யப்படுகின்றன. வழக்கமாக எத்தனையோ படங்களுக்கு அது நடந்திருக்கிறது. அதுபோல நடந்திருக்கலாம்.

ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதை தி.மு.க.,வோ, ம.தி.மு.க.,வோ கூட்டணி கட்சிகளோ எதிர்க்கவில்லை. அவரவர் விருப்பம். பேச்சுரிமைக்கு என்ன அனுமதி உண்டோ, அது போன்று திரைப்பட தயாரிப்புக்கும் உரிமை உண்டு. அவர்கள் தாராளமாக வெளியிடலாம். திரையில் படம் ஓடட்டும்.

நாங்கள் இதுவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென ஒருபோதும், ஒரு சொல் கூட, நானோ, எங்கள் இயக்கத்தின் முன்னணியினரோ தப்பித் தவறியும் கூட பேசியது கிடையாது. எங்களைப் பொறுத்தவரை அப்படியான கோரிக்கை நேற்று வரை இல்லை. இனிமேலும் வைக்கமாட்டோம் என்று வைகோ தெரிவித்தார்.

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்