“ஆட்சியில் பங்கு கேட்காததற்கு பதற்றம் காரணம் அல்ல” என மதுரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
போதை பொருள் ஒழிப்பு, ஜாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஜன. 2ல் திருச்சியில் நடைபயணத்தை துவக்கிய வைகோ, நேற்று மாலை மதுரை ஒத்தக்கடை வந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் கூறியதாவது: அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் எளிதில் சாதித்து விடலாம் என சிலர் நினைக்கின்றனர். ஞானபாண்டன் படம் எந்த காரணத்திற்காக தடுக்கப்பட்டுள்ளத என்பதை சென்சார் போர்டு விளக்க வேண்டும். சிவாஜி நடித்த பராசக்தி படம் தான் தெரியும். தற்போதுள்ள பராசக்தி பற்றி எனக்கு தெரியாது.
பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்திற்கு தி.மு.க.வை துடைத்தெறிந்து விடலாம் என நினைக்கின்றனர். வரும் தேர்தலில் தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். ம.தி.மு.க., தி.மு.க. இணைப்பிலான கூட்டணி சித்தாந்த அடிப்படையிலானது. ஆட்சியில் பங்கு என்று கருதிக் கொள்ளவில்லை. இதற்கு பதற்றம் காரணமல்ல.
அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என இதுவரை கேட்காததற்கு காரணம் உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய பின் தொகுதிகள் குறித்து அறிவிப்போம். இவ்வாறு கூறினார்.
